உலக சுகாதார நிறுவனம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை, நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளன. அந்த ஆய்வு முடிவுகள், வாரத்திற்கு 55 மணிநேரத்திற்கு மேல் வேலைசெய்வது மரணத்தை முன்கூட்டியே விளைவிக்கிறது என கூறியுள்ளது.
வாரத்திற்கு 55 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்வது, பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை 35 சதவீதம் அதிகரிக்கிறது என கூறும் ஆய்வு முடிவுகள், இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை 17 சதவீதம் வரை அதிகரிக்கிறது என கூறுகிறது. 2016ஆம் ஆண்டு, வாரத்திற்கு 55 மணிநேரத்திற்கு மேல் வேலைசெய்த 3,98,000 பேர் பக்கவாதத்தால் உயிரிழந்துள்ளனர் என்றும், 3,47, 000 பேர் இதய நோயால் உயிரிழந்துள்ளனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புகளின் ஆய்வறிக்கை கூறுகிறது.
2000 - 2016 வரை அதிக நேரம் வேலை பார்த்ததால், இதயநோய் ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 சதவீதம்வரை உயர்ந்துள்ளதாகவும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 சதவீதம்வரை அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் உலக சுகாதார நிறுவனம் இந்த ஆய்வு குறித்து கூறும்போது, "கரோனா பெருந்தொற்றால், வேலை நேரம் மேலும் அதிகரித்துவிட்டது" என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.