உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கு ஒமிக்ரான் வகை கரோனாவே முக்கிய காரணம் எனக் கருதப்படும் நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தினமும் லட்சக்கணக்கானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனம், கரோனா சுனாமி சுகாதார கட்டமைப்பின் மீது பெரும் அழுத்தத்தை அளிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "டெல்டா பரவிவரும் அதேநேரத்தில், அதிகம் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரானும் பரவி வருகிறது. இது கரோனா சுனாமிக்கு வழிவகுக்கிறது. இது சோர்வுற்றுள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் சரிவின் விளிம்பில் உள்ள சுகாதார கட்டமைப்புகள் மீது தொடர்ந்து பெரும் அழுத்தத்தைக் கொடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகைகளானது இரட்டை அச்சுறுத்தல்கள் ஆகும். அவை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும், இறப்புகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வழிவகுத்தது. புதிய உலகளாவிய பாதிப்புகள் கடந்த வாரத்தை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளன" எனவும் கூறியுள்ளார்.