ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர். அண்மையில் தலைநகர் காபூல் நகரை தலிபான்கள் சுற்றி வளைத்தனர். இதையறிந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ஃரப் கனி, தனது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுடன், சிறப்பு விமானம் மூலம் தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், அதிபர் பணம், கார்கள், ஹெலிகாப்டர்களுடன் ஓடியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிபர் அஷ்ஃரப் கனி தனது குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு விவகாரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ஃரப் கனி மற்றும் அவரது குடும்பத்தாரை நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் வரவேற்றுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு அஷ்ஃரப் கனி தான் காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.