ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் நேற்று (04.10.2021) இரவு திடீரென முடங்கின. இதனையடுத்து அந்த நிறுவனங்கள், மீண்டும் தங்களது தளங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கின. இதையடுத்து, ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்கள் படிப்படியாக மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.
இந்தநிலையில் வாட்ஸ்அப் நிறுவனம், தங்களது தளம் மீண்டும் 100 சதவீத செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், வாட்ஸ்அப் மீண்டும் இயங்கும்வரை பொறுமையுடன் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் நன்றி கூறியுள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், "வாட்ஸ்அப்பை மீட்டெடுக்க எங்கள் குழுக்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றியபோது பொறுமையாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. நாங்கள் உண்மையாகவே உங்களை நன்றி பாராட்டுகிறோம். மக்களும், நிறுவனங்களும் எந்த அளவிற்கு எங்களது செயலியை சார்ந்துள்ளார்கள் என்பதைக் கண்டு தொடர்ந்து தாழ்மையுடன் இருப்போம்" என கூறியுள்ளது.