உலக அளவில் பிரபலமான பல நிறுவனங்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பல உயர் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா, சாந்தனு நாராயண் உள்ளிட்ட பல இந்தியர்கள் உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் ஐ.பி.எம் நிறுவனத்தின் சி.இ.ஓ வாக இந்தியரான அரவிந்த் கிருஷ்ணா அறிவிக்கப்பட்ட சூழலில் மேலுமொரு அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியர் ஒருவர் சி.இ.ஓ வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்படும் 'வீ ஒர்க்' ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான சந்தீப் மத்ராணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் உலகம் முழுவதும் பல பில்லியன் டாலர்கள் சம்பாதித்த இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சந்தீப் மத்ராணி இதற்கு முன்பு பல முன்னணி நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.