அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது உயர்மட்ட கூட்டம் இன்று (21/09/2021) தொடங்கியது. செப்டம்பர் 27- ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் உரை நிகழ்த்த உள்ளனர்.
அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையில் இன்று (21/09/2021) உரையாற்றிய அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், "அணு ஆயுதங்களை ஈரான் பெறாமல் தடுப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. கொரிய தீபகற்பத்தில் ராணுவ மயமாக்கலைத் தடுப்பதிலும் ராஜதந்திர நடவடிக்கைளை எடுத்து வருகிறோம். 20 ஆண்டுக்கு முன் பயங்கரவாத தாக்குதலின் போது இருந்த அமெரிக்கா தற்போது இல்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா தன்னையும், நட்பு நாடுகளையும் தொடர்ந்து பாதுகாக்கும். வன்முறைகள், மிரட்டல்களின்றி சிறுமிகள், பெண்கள் உரிமைகளைப் பெற உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும்" என்றார்.