ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் நேற்று தங்களது ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷ்ய அதிபர் புதின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார்.
மேலும் அப்பகுதிகளில் அமைதியை காக்க ரஷ்ய படைகளை அனுப்பவும் உத்தரவிட்டார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று அதிகாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், உக்ரைன் யாருக்கும் பயப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “நாங்கள் எங்களது சொந்த நிலத்தில் இருக்கிறோம். நாங்கள் யாருக்கும் எதற்கும் பயப்பட மாட்டோம்” என கூறியுள்ளார்.
மேலும் உக்ரைனின் பகுதிகளை விட்டு கொடுக்கமாட்டோம் எனவும் தெரிவித்த வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவிற்கு எதிராக தங்களது நட்பு நாடுகளின் தெளிவான, பயனுள்ள நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோம் என கூறியதோடு, உக்ரைன், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்களின் அவசர கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.