அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது
இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.
இதற்கிடையில், இந்த அதிபர் தேர்தலில் அதே குடியரசுக் கட்சியில் உள்ள அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான விவேக் ராமசாமி என்பவர் போட்டியிடுவதாக அறிவித்தார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட இருப்பது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும் விவேக் ராமசாமிக்கும் கடும் போட்டி நிலவி வந்தது.
இந்த நிலையில், அமெரிக்கா அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்த முழுப் பிரச்சாரமும் உண்மையைப் பேசுவதாகும். இன்றிரவு நாங்கள் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. வெள்ளை மாளிகையில் எங்களுக்கு ஒரு அமெரிக்க முதல் தேசபக்தர் தேவை. மக்கள் தங்களுக்கு யார் வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். இன்றிரவு நான் எனது பிரச்சாரத்தை இடை நிறுத்துகிறேன். டொனால்ட் ஜே. டிரம்ப்பை ஆமோதிக்கிறேன், மேலும் அவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். இந்த அணி, இந்த இயக்கம் மற்றும் நம் நாட்டைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.