கரோனா பேரிடரை எதிர்கொள்ளும் பேராயுதமான தடுப்பூசிக்கு பல்வேறு நாடுகளில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் 34 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அமெரிக்காவில், 30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 16 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசியை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளனர். தனது தேவைக்கு அதிகமாக 8 கோடி தடுப்பூசி டோஸ்களை வைத்துள்ள அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பின் கரோனா தடுப்பூசியைப் பகிர்ந்தளிக்கும் திட்டமான 'கோவேக்ஸ்' திட்டத்தின் படி 2.5 கோடி தடுப்பூசி டோஸ்களை வெளிநாடுகளுக்கு நன்கொடையாக வழங்க முன் வந்துள்ளது.
கரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள கனடா, மெக்சிகோ மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு 60 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில் பிற நாடுகளில் இருந்து வேறு எந்த பலன்களைப் பெறுவதற்கும் அமெரிக்கா இதனை பயன்படுத்தாது என அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக நாடுகளுடன் தடுப்பூசிகளைப் பகிர்ந்தளிக்கும் நிலையில் தற்போது அமெரிக்கா உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தடுப்பூசி வழங்குவதில் அண்டை நாடுகளான பெரு, ஈகுவேடார், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசிகளை அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். கரோனாவுக்கு பின் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மீட்க தேவையான நடவடிக்கை குறித்தும் இருவரும் பேசியதாக வெள்ளை மாளிகையின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ட்விட்டரில் இது பற்றிக் கருத்து தெரிவித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவுக்கு தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது என கூறியுள்ளார்.
தற்போது இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்க முன் வந்திருக்கும் தடுப்பூசி டோஸ்கள் 10 லட்சம் முதல் 50 லட்சம் டோஸ்களாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, நன்கொடை போக, மேலும் அதிக தடுப்பூசிகளை விலைக் கொடுத்து வாங்குவது குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.