
இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் கரோனா வைரஸ் பல்வேறு விதமாக மரபணு மாற்றமடைந்து வருகிறது. அப்படி மரபணு மாற்றமடைந்த சில கரோனா வைரஸ்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது கூட இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கரோனா, டெல்டா ப்ளஸ் ஆக மரபணு மாற்றமடைந்துள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சூப்பர் வேக்சின் என்று கூறப்படும் தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஹைபிரிட் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை எலியின் மீது பரிசோதித்ததில், மரபணு மாற்றமடைந்த பல்வேறு கரோனா வைரஸ்களின் ஸ்பைக் ப்ரோட்டீனுக்கு எதிராக இந்ததடுப்பூசி ஆன்டிபாடிகளை உருவாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சூப்பர் வேக்சின் தடுப்பூசியை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள், தற்போது பரவி வரும் கரோனா வைரஸ் (கோவிட்19), அதன் மரபணு மாற்றமடைந்த கரோனா வகைகளுக்கு எதிராக மட்டுமின்றி, வருங்காலத்தில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ள பிற வகை கரோனா வைரஸ்களிடமிருந்தும் இந்த சூப்பர் வேக்சின் பாதுகாப்பு அளிக்கும் என தெரிவித்துள்ளனர். இந்த சூப்பர் வேக்சின் அடுத்தாண்டு மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டவுள்ளது.