US says concerned about CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

Advertisment

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

Advertisment

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், சி.ஏ.ஏ சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறினார்.

அதில் கூறிய அவர், “மக்களவை தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டம் அமலுக்கு வரும் என கடந்த 4 வருடங்களாக 41 முறை நான் கூறியுள்ளேன். பா.ஜ.க.வும் மோடி தலைமையிலான அரசும், சி.ஏ.ஏ சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. அதை ரத்து செய்வதில் சாத்தியமில்லை. சி.ஏ.ஏ குறித்து கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். கொரோனா தொற்று காரணமாகவே சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால் மாநிலங்களுக்கு உரிமை இல்லை. எனவே, சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூற மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை” என்று கூறினார்.

Advertisment

US says concerned about CAA

இந்த நிலையில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11ஆம் தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.