தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத காரணத்தால் பிரேசில் அதிபரை ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொள்ள உலகத் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கா வந்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடியும் இன்று (22.09.2021) அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற பிரேசில் அதிபர் போல்சனேரோ, அங்குள்ள ஹோட்டல் ஒன்றுக்குத் தன் அமைச்சர்களுடன் உணவருந்த சென்றுள்ளார். உள்ளே செல்ல முயன்ற அவரிடம் உணவக பாதுகாவலர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழைக் கேட்டுள்ளனர். பிரேசில் அதிபர் தான் இன்னும் தடுப்பூசி போடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட பாதுகாவலர், தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று யோசித்த பிரேசில் அதிபர், சாலையோர கடையொன்றில் தன் அமைச்சர் பரிவாரங்களுடன் உணவருந்திச் சென்றார். அவர் ரோட்டுக் கடையில் பீட்சா சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.