வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில், வங்கதேசம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அனைத்து விடுதிகளையும் மாணவர்கள் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து வங்கதேச உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகியதோடு, நேற்று ஹெலிகாப்டர் மூலம் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தனிமனித சொத்துக்கள் தீவை எரிக்கப்படுவது, அடித்துக் கொல்லப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வங்காளதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள இடைக்கால அரசு இதுபோன்ற செயல்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் உயிருக்குப் பயந்து வங்கதேசத்தின் மக்களில் ஒரு பகுதியினர் அந்நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவிற்குள் நுழைய முயன்று வருகின்றனர்.
குறிப்பாக அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கள் உயிருக்குப் பயந்து இந்தியாவில் தஞ்சமடைய வேண்டும் என விரும்புகின்றனர். இந்திய-வங்கதேச எல்லை பல மாநிலங்களில் பறந்துவிரித்துள்ளது. பல இடங்களில் எல்லை ஆறுகள் மற்றும் ஏரிகள் மூலமாக பிரிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் நதி தான் இந்தியாவிற்கும் பங்கதேசத்திற்கும் எல்லையாக உள்ளது. அதேபோல் மேற்குவங்கத்தில் கூச் பிகார் மாவட்டத்தில் நதியை கடந்தால் இந்திய எல்லைக்குள் வந்துவிடலாம் என்ற நிலை உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் நுழைய வங்கதேச மக்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அகதிகளாக வரும் வங்கதேச மக்களை தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஒருபுறம் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.