24 வயது இளைஞர் ஒருவர் அரசு விதியிலிருந்து தப்பிப்பதற்காக 81 வயது மூதாட்டி ஒருவரை திருமணம் செய்துகொண்ட சம்பவம் உக்ரைன் நாட்டில் நடந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில் 18 முதல் 26 வயது வரையிலான ஆண்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அரசு விதிப்படி இந்த வயதிற்குட்பட்ட ஆண்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அதே சமயம் இந்த வயதில் உள்ள ஒரு ஆண், உடல் ஊனமுற்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவரை கவனித்து வந்தால் அந்த ஆணுக்கு கட்டாய ராணுவ சேவையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
இந்த விதியை பயன்படுத்தி ராணுவ சேவையிலிருந்து தப்பிக்க நினைத்த இளைஞர் ஒருவர், இதற்காக 81 வயது மூதாட்டி ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரை சேர்ந்த அலெக்சாண்டர் கோண்ட்ரட்யுக் என்ற அந்த இளைஞர் ராணுவத்தில் சேருவதை தவிர்ப்பதற்காக தனது நெருங்கிய உறவினரான மாற்றுத்திறனாளியான ஜினாய்டா இல்லரியோனோவ்னா என்ற மூதாட்டியை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், திருமணத்தன்று மட்டுமே அலெக்சாண்டர், அந்த மூதாட்டி வீட்டில் இருந்ததாகவும், அதன் பின் அவர் அங்கு வரவே இல்ல எனவும் பக்கத்து வீட்டினர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகளோ, இது போலியான திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டால் அலெக்சாண்டரை ராணுவத்தில் பணியாற்ற அழைப்பு விடுக்க முடியும் என்றும், அப்படி இல்லையெனில் போலியான திருமணம் என பரவும் செய்தியால் அலெக்சாண்டர் கவலை அடையவில்லை என்றால் அவர் தனது திருமண வாழ்க்கையை தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.