கிரேட் பிரிட்டனின் ஒரு பகுதியான வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் நகரில் அமைந்துள்ள யால்க் என்ற ஆட்சேர்ப்பு நிறுவனம், தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் 55 ஆட்சேர்ப்பு அதிகாரிகள், அவர்களது குழு உறுப்பினர்கள் என அனைவரையும் நான்கு நாட்கள் வெளிநாட்டு சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது.
கடந்த மாதம் தங்களது நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தவர்கள், இம்மாதத்தில் தங்களது நிறுவனத்தில் பணிக்கு சேரப்போகிறவர்களையும் இந்த வெளிநாட்டு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்போவதாகவும் கூறியுள்ள அந்த நிறுவனம் இந்த சுற்றுலாவிற்காக 100,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ஒரு கோடி) செலவு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
ஸ்பெயினின் கேனரி தீவுகளில் மிகவும் பெரியதான டெனெரிஃப் தீவுகளுக்கு இந்த சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் யால்க் நிறுவனம், கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா பரவலின்போது கடினமான நேரத்தை சந்தித்ததையும், அதேநேரத்தில் 2021 மிகவும் லாபகரமான ஆண்டாக அமைந்ததையும் சுட்டிக்காட்டி, கடந்த இரண்டு வருடங்களாக கடினமாக பணியாற்றிய பணியாளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யால்க் நிறுவனத்தின் இந்த முடிவு, அதன் பணியாளர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துள்ளது.