Skip to main content

“மாநில முதல்வர்கள் இருவர் இலங்கைக்கு வருவதை உறுதி செய்துள்ளனர்” - இலங்கை துணைத் தூதர் வெங்கடேஸ்வரன்! 

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

"Two Chief Ministers have confirmed their arrival in Sri Lanka" - Sri Lankan Deputy Ambassador Venkateswaran!

 

இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார் டி. வெங்கடேஸ்வரன். இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவருக்கும் நெருங்கிய நண்பர் இவர். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரனின் இந்த நியமனமும், தமிழ்நாட்டில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்ததை நக்கீரன் விரிவாக எழுதியிருந்தது.

 

இந்த சந்தேகங்கள் தொடர்பான கேள்விகளை வெங்கடேஸ்வரனிடமே முன்வைத்தோம்.

 

இந்தியாவிற்கான துணைத்தூதர் என்கிற முக்கியப் பதவியில் நீங்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் அடிப்படை நோக்கம் என்ன?
 

நான் ஒரு தமிழன். என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகள் அனைத்தும் தமிழகத்தில்தான். இலங்கை அரசு நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் என்ற முக்கிய பொறுப்பும் எனக்கு கொடுக்கப்பட்டது. தற்போது, இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை வலிமைப்படுத்தவும், வர்த்தக ரீதியிலான முன்னேற்றத்தை மேம்படுத்துவதுமே எனது நியமனத்தின் அடிப்படை நோக்கம்.

 

துணைத் தூதர் என்பவர் வர்த்தகரீதியிலான உறவுகளை மேம்படுத்துவது எப்படி சாத்தியம்?
 

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் இலங்கைக்கான துணைத்தூதராக நான் பொறுப்பில் இருக்கிறேன். பொறுப்பேற்றுக்கொண்ட 6 மாதங்களில் மேற்சொன்ன 5 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் அரசு முறையாக பயணம் செய்து இலங்கையில் முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளை துவக்கியிருக்கிறேன். இதற்காக மாநில முதல்வர்களையும், மாநில ஆளுநர்களையும் சந்திக்கும் எனது முயற்சி வெற்றியடைந்துவருகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். விரைவில் பல வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வர்த்தக உறவுகளைக் கடந்து அரசியல் ரீதியிலான உறவுகளும் வலிமை பெறும். அரசு பங்களாவில் அமர்ந்து கொண்டு தொலைபேசி அழைப்புகளை ஏற்பது மட்டுமே எனது பணி அல்ல!

 

இந்தியா - இலங்கைக்கான நல்லுறவை வளர்ப்பதற்கு என்ன செயல் திட்டம் உங்களிடம் இருக்கிறது?
 

தென்னிந்தியாவின் வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் காலூன்றும்போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அரசியல் உறவும் புரிந்துணர்வும் பலமாகும். தென்னிந்தியத் திருத்தலங்களைத் தரிசிக்க இலங்கை மக்கள் விரும்புகின்றனர். அதேபோல, இலங்கையில் தமிழ்க் கடவுள் முருகனின் திருத்தலமான நல்லூர், கதிர்காமத்திற்கு யாத்திரை வர தமிழகம் விரும்புகிறது. அதனடிப்படையில் அரசியல், வர்த்தகம், ஆன்மீகம், கல்வி, சுகாதாரம் சார்ந்த பணிகளுக்கான திட்டங்களை செயல்படுத்துவதே இலங்கையின் நோக்கம். 

 

வெளியுறவுத்துறையில் அனுபவமிக்க அரசு அதிகாரிகளைத்தான் துணைத்தூதராக நியமிப்பது வழக்கம். ஆனால், சிலபல அரசியல் காரணங்களுக்காக வர்த்தகப் பின்னணி கொண்ட உங்களை நியமித்ததில் சட்ட நெறிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

இந்தியாவில் இலங்கைக்கான 3 உயர் தூதரகங்களில் பிரதான தூதரகம் டெல்லியிலும், துணைத்தூதரகம் சென்னை, மும்பை நகரங்களிலும் இயங்குகின்றன. இந்த 3 தூதரகங்களிலுமே அரசியல் ரீதியிலான செயல்பாடுகளில் அனுபவமிக்கவர்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நான் ஒரு தமிழன். அந்த வகையில் தமிழகம் உள்ளடக்கிய தென்னிந்தியாவின் அரசியலையும், வர்த்தகச் சூழல்களையும் புரிந்துகொண்டவன் என்ற அடிப்படையில் இந்தப் பதவியில் என்னை நியமித்திருக்கிறார்கள். இதில், எந்த சட்டநெறிமுறைகளும் மீறப்படவில்லை.

 

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுற்று கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள், வாழ்வாதார பிரச்சனைகளுக்கான தீர்வு இன்னும் மறுக்கப்பட்டே வருகிறதே? 
 

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு தமிழினத்திற்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் மாகாணத் தேர்தல்கள் நடக்கும். தமிழர்களுக்கான அரசியல் ஜனநாயக உரிமைகள் கிடைக்கும். ஐ.நா. பொதுச்செயலாளரை ஜனாதிபதி சந்தித்தபோது கூட தமிழர்களுக்கான உரிமைகள் குறித்து உறுதி செய்திருக்கிறார்.


இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் சீனாவிடம் இலங்கையின் இறையாண்மை அடகு வைக்கப்பட்டிருப்பதாக வரும் குற்றச்சாட்டுகளில் உங்கள் பார்வை?


ஒப்பீட்டளவில் கணக்கிட்டால், கரோனாவால் பொருளாதார பாதிப்பு இல்லாமல் செயல்பட்டிருக்கிறார் இலங்கை ஜனாதிபதி. மக்களுக்கான அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதில் இருந்த தடைகளும் தகர்க்கப்பட்டன. போர்ச் சூழலில் கூட பொருளாதாரம் பாதிக்காத நிலையில், இப்போது எந்த நெருக்கடியும் இலங்கைக்கு இல்லை. அதனால் சீனாவிடம் அடகு வைக்கப்பட்டதாகச் சொல்வது ஏற்புடையதல்ல.

 

ad

 

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவது இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என்கிறார்களே?
 

சீனா மட்டுமல்ல கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் வர்த்தகம் இலங்கையில் உண்டு. இந்தியாவும் பல ஆண்டுகாலமாக இலங்கையில் வர்த்தக உறவை வலிமையாகத்தான் வைத்திருக்கிறது. நான் சந்தித்த இந்திய மாநில முதல்வர்களும் கவர்னர்களும் கூட இலங்கை - சீனாவிற்கான உறவுகளைப் பற்றி என்னிடம் விவாதித்தனர். அவர்களிடம், வர்த்தக உறவுகளைக் கடந்து சீனாவிடம் எந்த நெருக்கமும் இலங்கைக்கு இல்லை, சீனாவை போலவே இந்தியாவின் முதலீடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்பதைச் சொல்லியிருக்கிறேன். அதனையேற்று, மாநில முதல்வர்கள் இருவர் இலங்கைக்கு வருவதை உறுதி செய்துள்ளனர். ஆக, இந்திய - சீன உறவுகள் சுமுகமாக இல்லாததால்தான் அச்சுறுத்தலாக தோற்றமளிக்கிறதே தவிர, இலங்கையிலுள்ள சீனாவின் முதலீடுகளால் எந்த அச்சுறுத்தலும் இந்தியாவுக்கு கிடையாது.

 

சீனாவிற்காக இந்தியாவை உளவு பார்க்கவே இலங்கையால் நீங்கள் நியமிக்கப்படுவதாக சொல்லப்படுகிறதே?


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான் இந்தியாவை உளவு பார்ப்பதாகச் சொல்வது கற்பனைக்கும் எட்டாத ஆதாரமற்ற பொய்யான பரப்புரை. அந்தப் பொய்களை வன்மையாக கண்டிக்கிறேன். இந்திய - இலங்கை உறவை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது மட்டுமே எனது பணி. இலங்கை - இந்திய உறவு வலுப்பெறும்போது எனது நியமனத்தின் பொருளை உணர்வீர்கள்.

 

அனல்மின் நிலையங்களையும் துறைமுகங்களையும் நீங்கள் ஆய்வு செய்ததிலிருந்துதான் உளவு விவகாரம் தலைதூக்குகிறது?
 

காரைக்கால் - தலைமன்னார் இடையிலான கப்பல் போக்குவரத்து, வர்த்தகரீதியாக வெற்றிபெறாததால் அந்த திட்டம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் இலங்கை பிரஜைகள் தாயகம் திரும்ப கப்பல் போக்குவரத்தை எதிர்பார்க்கிறார்கள். வர்த்தகரீதியிலான சரக்கு போக்குவரத்தும் சுற்றுலா வர்த்தகமும் அதிகரிக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. அதனால், இடைநிறுத்தம் செய்யப்பட்ட கப்பல் போக்குவரத்தை துவக்க முடியுமா என புதுச்சேரி முதல்வர் மற்றும் ஆளுநரின் அனுமதியின் பேரிலேயே துறைமுகத்திற்குச் சென்று பார்த்தேன். அதேபோல, தூத்துக்குடியில் தனியாருக்கு சொந்தமான ஒரு அனல்மின் நிலையத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக முந்தைய பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையை நடத்த அங்கு சென்றேன். மற்றபடி, அரசு துறைமுகத்தை நான் ஆய்வு செய்யவில்லை. அதேபோல, இலங்கை ஜனாதிபதியின் இயற்கை உரம் பற்றிய அக்கறையால், அந்த தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனமான கோத்தாரி சுகர்ஸில் சிறப்பாக இருப்பதையறிந்து பார்வையிடச் சென்றேன். அதனால், தமிழகத்தில் எனது ஆய்வு என்பது வர்த்தகம் தொடர்பானதே தவிர வேறு எந்த காரணங்களுக்கும் கிடையாது.

 

கோவை வேளாண் பல்கலையிலும் இலங்கையின் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
 

விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகிய வேளாண் தொடர்பான விசயங்களில் சர்வதேச தரத்திலான தொழில்நுட்பம், தென்னிந்தியாவில்தான் இருக்கிறது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருக்கும் தொழில்நுட்பங்களை இலங்கை தொழிலதிபர்களுக்கு அறிமுகப்படுத்தும் கலந்துரையாடல்களுக்கு தமிழக ஆளுநரின் அனுமதி பெறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வல்லுநர்கள் இலங்கைக்கு வந்து அங்குள்ள விவசாய வல்லுநர்களுக்கு வகுப்புகள் எடுக்க அனுமதி தந்துள்ளார் தமிழகத்தின் முன்னாள் ஆளுநர். தற்போது புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றிருப்பதால் அவரை சந்தித்து இதனை வலியுறுத்தவிருக்கிறேன்.  

 

உங்களின் எதிர்கால செயல் திட்டங்கள் என்ன?


தென்னிந்தியாவின் முதலீட்டாளர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு ஏதுவாக, முதலீட்டாளர் குழு ஒன்றை எனது தலைமையில் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளேன். இதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் தொழில் துவங்குவதற்கான சூழல்களை உருவாக்க வேண்டும். இலங்கையின் ஜனாதிபதி, பிரதமரின் வழிகாட்டுதலில் இதனை செய்துவருகிறேன். தொழில் துவங்க இலங்கை ஒரு வளமான நாடு என்பதை நிலைநிறுத்துவதே எனது செயல்திட்டம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை வேண்டும்'-அன்புமணி வலியுறுத்தல்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Action should be taken without further delay'-Anbumani insists

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தொடர்கதையாகி வரும் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ' வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு  அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  ராமேஸ்வரம் மீனவர்கள்  21 பேரை சிங்கள கடற்படையினர்  கைது  செய்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற 2 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  பாரம்பரியமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை பன்னாட்டு விதிகள் அனுமதிக்கும் போதிலும், அந்த விதிகளை மீறி தமிழக மீனவர்களை  சிங்கள கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வுகள் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றன.  கடந்த 10-ஆம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களும்,  15-ஆம் தேதி  15 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.   அதனால், அந்தப் பகுதிகளில்  ஏற்பட்ட பதட்டமும், கவலையும்  விலகுவதற்கு  முன்பே  மேலும் 21  மீனவர்களை  சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

'Action should be taken without further delay'-Anbumani insists

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கடந்த இரு மாதங்களில் 80-க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை  மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சிங்களக் கடற்படையினரின்  அத்துமீறல்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மற்றொருபுறம்  தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா - இலங்கை  அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் படையினரால்  கைது செய்யப்பட்டுள்ள  58 மீனவர்களை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் அனைத்துப் படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தொடரும் அத்துமீறல்; மீண்டும் 21 மீனவர்கள் சிறைபிடிப்பு

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
continuing trespass; 21 fishermen captured again

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

அண்மையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்களை அறிவித்து நடத்தி இருந்தனர். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியிருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 10/03/2024 அன்று 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை மீண்டும் கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் மீனவர்களின் இரண்டு விசைப்படகு களையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.