திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரிகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியிலிருந்து காற்றாலை உதிரிப்பாகங்களை இறக்கி வைத்துவிட்டு திருச்சி துவாக்குடியை நோக்கி டாரஸ் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்த பொழுது லாரியானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புறத்தில் அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் இரண்டு லாரிகளும் தீப்பற்றி எரிந்தன. இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் டாரஸ் லாரி ஓட்டுநர் இந்திரா மணிபால் என்பவர் எரிந்து சடலமானார்.
சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு டாரஸ் லாரிக்குள் மற்றும் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். அவர் லாரியின் உதவியாளர் பட்டேல் என்பதும், இருவரும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தால் திருச்சி துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.