இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா மீது முட்டை வீச்சு. முட்டைகள் வீசிய நபரை இங்கிலாந்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர்.
பிரிட்டன் மன்னர் சார்லஸ் இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள யோர்க் நகரம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் மன்னருக்கு வாழ்த்தொலிகளை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது மக்களோடு மக்களாக நின்றிருந்த இளைஞர் ஒருவர் மன்னர் மீது முட்டைகளை வீசுகிறார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அந்த இளைஞர், முட்டைகளை மன்னர் சார்லஸ் மீதும் அவரது மனைவி மீதும் வீசுகிறார். ஆனால் முட்டைகள் எதுவும் மன்னர் மீது விழவில்லை.
உடனே அங்கிருந்த காவல் அதிகாரிகள் மன்னரையும் அவரது மனைவியையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். முட்டைகளை வீசிய இளைஞரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் முட்டைகளை வீசிய இளைஞர், இந்த நாடு அடிமைகளின் ரத்தத்தால் எழுப்பப்பட்டது. என் மன்னரால் அல்ல என்ற கோஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.