ரஷ்யா உடனான போரை எதிர்கொள்ளும் நிலையில், உலக நாடுகள் தங்களுக்கு உதவவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் பல நகரங்கள் மீது குண்டு வீசியும், தரைப்படையினருடன் நுழைந்தும் ரஷ்யா தாக்குதலை நடத்தி வரும் நிலையில், உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று (24/02/2022) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது...
"ரஷ்யா பெரியளவில் உக்ரைனுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தி வரும் நிலையில், வல்லரசு படையை எதிர்த்து உக்ரைன் தனித்துப் போரிட்டு வருகிறது. ரஷ்ய படைகளை எதிர்கொள்வதில் உக்ரைன் தனித்து விடப்பட்டுள்ளது. உக்ரைனுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்கொள்ள யாராவது இருக்கிறீர்களா என்றால், இல்லை என்பது தான் பதில். நேட்டோவில் உக்ரைனை உறுப்பினராக்க யார் தயாராக இருக்கிறார்கள்?.உக்ரைனை ஆதரிப்பதாகக் கூறி அனைவரும், இப்போது அஞ்சுகிறார்கள். ரஷ்யாவின் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள், ராணுவத்தினர் 130- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள், 300- க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரஷ்ய படைகள் தன்னையும், தன் குடும்பத்தினரையும் முதல் எதிரியாகக் குறி வைத்துள்ளது, தான் தற்போது தலைநகர் கீவ்வில் தான் இருக்கிறேன்" என்றார்.
இதற்கிடையே, உக்ரைனில் இருந்து 18 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், அச்சத்தில் உறைந்துள்ள உக்ரைன் மக்கள், அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.