இரவு நேரத்தில் கரும்பு சாப்பிட வந்த யானைக்குட்டி வயலில் இருந்த காவலர்களைப் பார்த்து ஒளிய இடம் தேடி கம்பத்திற்குப் பின்னால் ஒளிந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.
யானைகள் அதிகம் காணப்படும் நாடான தாய்லாந்தில், யானைக்கூட்டம் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் புகுந்து கரும்பு, சோளம் போன்ற பயிர்களைச் சாப்பிடுவது வழக்கம். அப்படி, வடக்கு தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் இரவு நேரத்தில் குட்டி யானை ஒன்று கரும்பு சாப்பிட வந்துள்ளது. அதேநேரம், கரும்பு தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த அங்கிருந்த காவலர்கள், சத்தம் கேட்ட பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது டார்ச்லைட் வெளிச்சத்துடன் ஆட்கள் வருவதை கண்ட அந்த யானை குட்டி ஒளிந்துகொள்ள இடம் தேடியுள்ளது. ஒளிந்துகொள்ள சரியான இடம் எதுவும் கிடைக்காத நிலையில், அங்கிருந்து கம்பம் ஒன்றின் பின்னால் அது ஒளிந்துகொண்டு அசையாமல் நின்றுள்ளது. தன்னைவிடச் சிறிய கம்பத்தின் பின்னால் யானைக்குட்டி ஒளிந்துகொள்ள முயன்ற இந்த சம்பவத்தை அங்கிருந்த காவலர்கள் புகைப்படமாக எடுத்துள்ளனர். ஒளிந்துகொள்ளத் தெரியாத அந்த யானைக்குட்டியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.