தாய்லாந்து நாட்டில் அவசரநிலையை மீறி மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவத் தளபதியாக இருந்த பிரயுத் சான் ஓச்சா, ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் அந்நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்றார். இருப்பினும், இவருக்கு எதிராக மக்கள் தொடர்ந்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
1973 -ஆம் ஆண்டு நடந்த மாணவர்கள் எழுச்சியின் 47 -ஆவது நினைவுதினப் பேரணி அண்மையில் நடைபெற்றபோது, அது பிரதமருக்கு எதிரான போராட்டமாக மாறியது. இப்போராட்டத்தில், அந்த நாட்டின் ராணி சென்ற வாகனத்தையும், பாதுகாப்பு வாகனங்களையும் போராட்டக்காரர்கள் சூழ்ந்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தலைநகர் பாங்காக்கில் அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது. இந்தச் சூழலில், பாங்காக்கில் நேற்று மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட 10,000க்கும் மேற்பட்டோர் வீதிகளில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் போராட்டத்தை அடக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும், நாளுக்குநாள் அந்நாட்டில் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.