அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நான் ஐ.நா.வில் பேசுகிறேன். பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது. பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளம்.
குஜராத் முதலமைச்சராகவும், இந்தியப் பிரதமராகவும் கடந்த 20 ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். உலக ஜனநாயகத்தின் முன்னோடியாக இந்தியா இப்போது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டாக உலகம் முழுவதும் கரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஏழை மக்களுக்கு வீடுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு போன்றவற்றை இந்திய அரசு அளித்து வருகிறது. கடைக்கோடி மக்களைச் சென்றடையும் வகையிலான திட்டங்களை இந்திய அரசு வடிவமைத்துள்ளது.
நிலம் மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு அவற்றை உரிமையாகும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவைச் செய்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் ஆறு லட்சம் கிராமங்களை ட்ரோன் மூலம் கண்காணித்து மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ச்சி எனது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்தியா சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போது அதன் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. உலகிலேயே 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கக் கூடிய டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது. சொட்டு மருந்து போலச் செலுத்தக்கூடிய தடுப்பூசி, எம்ஆர்என்ஏ தடுப்பூசி ஆகியவை இந்தியாவில் தயாராகின்றன.
பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க முன்வர வேண்டும். உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் வளர்ந்தால் அது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகிவிடும். பிற்போக்கு சிந்தனை, அதனால் உருவாகும் பயங்கரவாதத்தை உலகம் தடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை சில நாடுகள் கருவியாகப் பயன்படுத்துகின்றன.
ஆப்கானிஸ்தான் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகாமல் நாம் அனைவரும் அவர்களைக் காக்க வேண்டும். பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு விவகாரங்களில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அச்சமின்றி நாம் நமது இலக்கை நோக்கி முன்னேறினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு பிரதமர் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.