கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவ நிலை மாற்ற மாநாட்டில் தமிழக சிறுமி ஆற்றிய உரை உலகளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் உட்பட 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. இதில் உலகம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்தும் அவற்றைச் சரிசெய்வது குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. இதில், தூய்மை தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசுவதற்காகத் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதான சிறுமி வினிஷா உமாசங்கருக்கு இளவரசர் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். சிறுமி வினிஷா சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டியை வடிவமைத்தற்காகச் சுற்றுச் சூழலுக்கான ஆஸ்கார் எனப்படும் ‘எர்த்ஷாட்’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர் ஆவார்.
சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் வினிஷா, இந்நிகழ்ச்சியில் பேசுகையில், "இன்று நான் உங்கள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் ஈடுபடத் தொடங்குங்கள்.
புதைபடிவ எரிபொருள்கள், புகை மற்றும் மாசுபாடு ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்திற்குப் பதிலாக எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்களான எங்களின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மற்றும் தீர்வுகளை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.
பழைய விவாதங்களைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்திற்கான புதிய பார்வை நமக்குத் தேவை. எனவே நமது எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும்.
இதில் நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும் நாங்களே வழிநடத்துவோம். தாமதித்தாலும் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டாலும், எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம். ஆனால், தயவுசெய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
எனது தலைமுறையில் பலர் வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர். மேலும், நாங்கள் கோபப்படுவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் எனக்கு கோபம் கொள்ள நேரமில்லை. எனக்கு செயல்பாடு முக்கியது.
நான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல. பூமியைச் சேர்ந்த பெண்ணும் தான். நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று பேசினார். நூற்றுக்கும் மேற்பட்ட உலக தலைவர்களுக்கு மத்தியில் வினிஷா நிகழ்த்திய இந்த உரை தற்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.