ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் தங்களது ஆட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் ஆப்கானில் தாங்கள் நிறுவவுள்ள ஆட்சி குறித்து தலிபான்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே பாஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான் தளபதி ஒருவர், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். எதிர்ப்புக் குழு தோற்கடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பாஞ்ஷிர் மாகாணம், தலிபான் எதிர்ப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஆப்கன் அதிபராகத் தன்னை அறிவித்துக்கொண்டுள்ள அம்ருல்லா சாலேவும், அஹமத் மசூத்தும் அந்த எதிர்ப்புக் குழுவிற்குத் தலைமை தாங்கி வருகிறார். அஹமத் மசூத் தலிபான்களுக்கு எதிராக போராடிய அகமது ஷா மசூத்தின் மகனாவார்.
தலிபான்களுக்கும் எதிர்ப்புக் குழுவிற்கும் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையொட்டி, கடந்த சில நாட்களாக இரு தரப்புக்கும் மோதல் நடந்துவந்த நிலையில், பாஞ்ஷிரைக் கைப்பற்றியுள்ளதாக தலிபான் தளபதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் பாஞ்ஷிர் பகுதி கைப்பற்றப்பட்டதாக தலிபான்கள் கூறியதை அம்ருல்லா சாலேவும், அஹமத் மசூத்தும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். தாலிபன்களின் படையெடுப்புக்கு தாங்கள் உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள அம்ருல்லா சாலே, தலிபான்களை தொடர்ந்து எதிர்ப்போம் என கூறியுள்ளார்.
அதேபோல் அஹமத் மசூத், பாஞ்ஷிர் கைப்பற்றப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் வரும் செய்திகள் பொய்யானவை என தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஆப்கான் தலைநகர் காபூலில் பாஞ்ஷிரை கைப்பற்றிவிட்டதாக கூறி, அதைக் கொண்டாடும் விதத்தில் தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் மூன்று பேர் பலியானதாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் ஆப்கான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.