அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்த கிறிஸ்டினா கோச் கடந்த வாரம் மீண்டும் பூமிக்கு திரும்பிய நிலையில், அவரது நாய் அவரை பார்த்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா, ரஷ்யா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்துள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் 6 வீரர்கள் தங்கியிருந்து தொடர்ந்து ஆராய்ச்சி வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தோராயமாக ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் மூன்று பேர் பூமிக்கு திரும்புவர், பின்னர் அதற்கு பதிலாக புதிதாக மூவர் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். தொடர்ந்து 10 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த அவர் கடந்த வாரம் பூமிக்கு திரும்பினார். இந்நிலையில், நீண்ட காலத்திற்கு பின்னால் வீட்டிற்கு சென்ற கோச்சை கண்டதும் அவரது நாய் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளது. கோச் மீது தாவி, அவரது முகத்தோடு முகம் உரசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது நாய். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
WATCH: After a 328-day mission, astronaut Christina Koch reunited with her dog who couldn’t be happier https://t.co/hZ2l4EtCyF pic.twitter.com/6CRkwaZ65C
— Reuters India (@ReutersIndia) February 15, 2020