ஜார்ஜ் ஃபிளாய்டு இறப்புக்குப் பின்னர் அமெரிக்காவில் வெடித்துள்ள போராட்டங்களில் காலனியாதிக்கவாதிகளின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பிரிட்டனிலும் இதுபோன்ற சிலை அகற்றும் போராட்டங்கள் நடைபெறத் துவங்கியுள்ளன.
அமெரிக்காவின் மினசொட்டாவில் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணை ஒன்றின்போது ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் ஒருவர் காவலரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இரண்டு வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போராட்டங்களில் காலையாதிக்கவாதிகளின் சிலைகளை அகற்றும் போராட்டங்களும் அதிகளவில் நடந்து வருகின்றன. இதில், மினசோட்டாவில் செயிண்ட் பாலில் உள்ள கிறிஸ்டோபர் கொலம்பஸின் 10 அடி உயர வெண்கலச் சிலை வீழ்த்தப்பட்டு தரையில் சாய்க்கப்பட்டது. மேலும் பல இடங்களிலிருந்த கொலம்பஸின் சிலைகளும் போராட்டக்காரர்களால் பெயர்தெடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல, 1891-ல் ரிச்மண்டின் மன்ரோ பூங்காவில் அமைக்கப்பட்ட ஜெனரல் வில்லியம்ஸ் கார்ட்டர் விக்காமின் சிலையும் அகற்றப்பட்டது. போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனவெறி மற்றும் காலனியாதிக்கவாதத்துடன் தொடர்புடைய நாட்டில் உள்ள சிற்பங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை அகற்றும் பணியில் அமெரிக்க அரசு இறங்கியுள்ளது. இதேபோல பிரிட்டனிலும் சிலைகள் அகற்றும் போராட்டம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
லண்டன் அருங்காட்சியகத்திற்கு வெளியே நிறுவப்பட்டிருந்த ராபர்ட் மில்லிகனின் சிலை, பிரிஸ்டல் நகரில் உள்ள அடிமை வர்த்தகர் எட்வர்ட் கால்ஸ்டனின் சிலை, ஆகியவை போராட்டக்காரர்களால் அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, போராட்டங்கள் அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்டு ஏகாதிபத்திய வாதிகளின் சிலைகள் பிரிட்டனின் தெருக்களிலிருந்து அகற்றப்படும் என்று லண்டன் மேயர் அறிவித்துள்ளார். இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸில் நடந்த இனவெறி எதிர்ப்பு போராட்டத்தில், பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபோல்ட் சிலை சேதப்படுத்தப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள இந்த போராட்டங்களால் பல இடங்களிலும் சிலை சேதப்படுத்தப்படுவதும், அகற்றப்படுவதும் அதிகரித்து வருகிறது.