Skip to main content

ஐ.நா தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா - நன்றி சொன்ன இலங்கை!

Published on 24/03/2021 | Edited on 24/03/2021

 

srilanka foregin minister

 

இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.

 

அவ்வாக்கெடுப்பில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், வங்கதேசம், கியூபா உள்ளிட்ட 11 நாடுகள், தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இருப்பினும் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. அதேநேரத்தில் இந்தியா, இலங்கை அரசியலமைப்பின் 13வது சட்டத் திருத்தத்தை உடனே அமல்படுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தலை உடனே நடத்தவும் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது. இந்தியாவுடன் சேர்த்து இந்தோனேசியா, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

 

இந்தநிலையில் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மொத்தமுள்ள 47 உறுப்பு நாடுகளில் பெரும்பான்மையாக 25 நாடுகள் (தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்காத 11 நாடுகள் + வாக்களிப்பைப் புறக்கணித்த 14 நாடுகள்) இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என்ற முடிவை வெளிப்படுத்தியதை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் அளித்த உறுதிமொழிகளோடும், இலங்கை அரசியலமைப்புக்கு இணக்கமான உள்நாட்டு வழிமுறைகளோடும் நாங்கள் தொடர்ந்து சர்வதேச அரங்கில் பயணிப்போம்" எனக் கூறியுள்ளார். மேலும் இலங்கைக்கு ஆதரவாகவும், வாக்கெடுப்பைப் புறக்கணித்த நாடுகளையும் தனித்தனியாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு நன்றி கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்