இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள அந்நாட்டு அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பணத்தைக் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் அரசு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மக்களின் சீற்றத்திற்கு பயந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மாளிகைவிட்டு வெளியேறிவிட்டார். அதிபர் பதவியை வரும் ஜூலை 13- ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்வதாக கோத்தபய தன்னிடம் தெரிவித்ததாக, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போது, அங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம், கட்டுக்கட்டாக இருந்ததைக் கண்டுபிடித்ததாகவும் அது ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடெங்கும் மின்சாரம் இல்லாமல் தாங்கள் திண்டாடிக் கொண்டுள்ள நிலையில், அதிபர் மாளிகையில் ஏராளமான ஏர் கண்டிஷனர் இயந்திரங்கள், இயங்கியவாறு இருந்ததாகப் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அதிபர் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள உடற்பயிற்சியிடம் கூடத்தில் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டனர். அதேபோல், சமையலறைக்கு சென்ற போராட்டக்காரர்கள், அங்கிருந்து உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டனர். அந்த வகையில், அதிபரின் படுக்கையறைக்கு சென்ற போராட்டக்காரர்களில் ஒருவர் "Mr. President..! Thank You! உங்க பெட்ல தான் தூங்க போறேன்..." என்று கூறி, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.