துருக்கி நாட்டில் கரோனா காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களுக்குத் தேவையான பொருட்களை வீடுகளுக்கே சென்று கொடுத்து வருகிறார் ஸ்பைடர் மேன் போல வேடமிட்ட ஒருவர்.
துருக்கி நாட்டின் கரோனா வைரஸால் 90,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2250-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில் துருக்கியின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான அந்தால்யாவில் ஸ்பைடர்மேன் வேடமணிந்த இளைஞர் ஒருவர் மக்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கித்தருவதோடு, மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கவும் வலியுறுத்தி வருகிறார்.
வீடு வீடாகச் செல்லும் இந்த ஸ்பைடர்மேன் மக்களுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டுக்கொண்டு, கடைக்குச் சென்று அந்தப் பொருட்களை வாங்கிவந்து தருகிறார். மேலும், மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும், சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த இக்கட்டான நிலையில் தங்களுக்கு உதவி செய்யும் இந்த ஸ்பைடர்மேனை அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.