தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல் கடந்த 3ஆம் தேதி இரவு அந்நாட்டில் திடீரென அவசரநிலை ராணுவச் சட்டத்தை அறிவித்தார். எதிர்க்கட்சிகள் நாட்டின் நிர்வாகத்தை குறுக்கீடு செய்வதாகவும், வடகொரியாவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், எதிர்நிலை செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டி அந்நாட்டு அதிபர், அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். தென் கொரியா அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தென் கொரியாவின் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, இராணுவச் சட்டத்தை திணிப்பதை எதிர்த்து பாராளுமன்றத்தை மீற முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால், நாடு முழுவதும் பதற்ற நிலை உருவானது.
இதையடுத்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 190 பேர் இந்த ராணுவச் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர். அதன் பேரில், இந்த சட்டம் செல்லாது என்று கூறி, சபாநாயகர் இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். அடுத்த நாளான 4ஆம் தேதி அதிகாலை, இந்த அவசரநிலை ராணுவச் சட்டத்தை திரும்ப பெறுவதாக அந்நாட்டு அதிபர் யூன் சுக் யீயோல் அறிவித்தார். நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற ராணுவப் படைகள் திரும்பப் பெறப்பட்டது. சர்ச்சைக்குரிய முடிவை திரும்பப் பெறுவதாக ஜனாதிபதி யூன் அறிவித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே கொண்டாடினர். இதனால், அங்கு இயல்பு நிலை திரும்பியது.
நள்ளிரவில் திடீரென்று, ராணுவநிலை அவரச சட்டம் அமல்படுத்தியதற்கு தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த சட்டத்தை அமல்படுத்தியதற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அதிபர் யூன் சுக் யீயோல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இராணுவச் சட்டத்தின் பிரகடனம், ஜனாதிபதியாக எனது விரக்தியிலிருந்து எழுந்தது. எனது செயல்பாட்டின் மூலம், நான் பொதுமக்களுக்கு கவலையையும் சிரமத்தையும் ஏற்படுத்தினேன். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான குடிமக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது பதவிக் காலம் உட்பட அரசியல் சூழ்நிலையை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை நான் கட்சியிடம் ஒப்படைக்கிறேன்” என்று கூறினார்.