நிலவின் நிலப்பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உறுதியாகியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
பூமியின் துணைக் கோளான நிலவினை ஆராய்வதற்கும், அங்கு இருக்கும் வளங்கள் குறித்து அறிந்துகொள்வதற்கும் பல்வேறு வளர்ந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், நிலவு குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்துவரும் நாசா, நிலவின் நிலப்பரப்பில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நாசாவின் சோஃபியா ஆய்வுக்களம் நிலவில் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆராய்ச்சிகளில் நிலவில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அணுக்கள் கண்டறியப்பட்டாலும், அது நீரா அல்லது ஹைட்ராக்ஸைலா எனக் கண்டறிய முடியாமல் இருந்தது. ஆனால், சோஃபியா மூலம் முன்பு பயன்படுத்தியதை விட மிகவும் துல்லியமான அலைநீளம் கொண்ட கதிர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டதில், நிலவின் பரப்பில் இருப்பது நீர் மூலக்கூறுகளே என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.