உலகமே உற்றுநோக்கும் வகையில், 700 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் ஒரு அதிசய நிகழ்வு நடக்கப்போகிறது. அதுவும், இந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
அப்படி என்னதான் அதிசயம் காத்திருக்கிறது, வரும் டிசம்பர் 21 ஆம் தேதி. கணக்கில் அறியப்படாத பால்வழி அண்டங்களை உள்ளடக்கிய அண்டத்தில் நாம் வசிக்கும் பூமிப் பந்து உட்பட எண்ணிலடங்கா நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன் என நினைத்துப்பார்க்கவே பிரமாண்டத்தை அள்ளிவீசும் விண்வெளியில், நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் வருகின்ற 21ஆம் தேதி தோன்ற இருக்கிறது.
மத நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தால் இயேசு கிறிஸ்து பிறப்பின் பொழுது வானில் தோன்றியதாக கிறிஸ்தவர்களால் போற்றப்படும் இந்த வால் நட்சத்திரத்திற்கு 'கிறிஸ்துமஸ் நட்சத்திரம்' என்று பெயர் சூட்டி உள்ளார்கள். உண்மையிலேயே தோன்றுபவை வால் நட்சத்திரமா என்றால், இல்லை. சூரியக் குடும்பத்தில் இருந்து பல மைல் தூரத்தில் உள்ள சனி, வியாழன் ஆகிய இரு கோள்களும், 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றுக்கொன்று அருகருகே சந்திக்கும்பொழுது, ஏற்படும் ஒளி இணைப்பே இந்த நட்சத்திரம் போன்ற ஒளி. இதுவே, கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று கூறப்படுகிறது.
பூமியிலிருந்து பார்க்கும் பொழுது இரண்டு நட்சத்திரங்கள் ஒரு சேர பிரகாசமாகக் காட்சியளிப்பதைப் போன்று தோன்றும் இந்த நிகழ்வு, மிக அரிதிலும் அரிதானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு முன்பு, இந்த விசித்திரமான நிகழ்வு, 1226-ஆம் ஆண்டு நடந்துள்ளது. 1226-க்கு பிறகு வியாழனும் சனியும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு மீண்டும் 1623-ஆம் ஆண்டு தோன்றியிருக்க வேண்டும். ஆனால், பல்வேறு சீதோஷண நிலைகள் காரணமாக, கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரியாமல் போனது. அடுத்த சுற்றான 2020 டிசம்பர் 21ஆம் தேதி (700 ஆண்டுகளுக்குப் பிறகு) இந்த 'கிறிஸ்துமஸ் நட்சத்திரம்' அதாவது வியாழன்-சனி சந்திக்கும் ஒளி இணைப்பு தோன்ற இருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர். டிசம்பர் 20- ஆம் தேதி சூரியன் மறைவிலிருந்து 22-ஆம் தேதி சூரியன் உதயமாகும் வரை, இந்த நிகழ்வு நடக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தாலும், 21-ஆம் தேதி இரவே தெளிவாக கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தைக் காணமுடியும். அதுவும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த அதிசய நிகழ்வைக் கண்டு ரசிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.