உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை கடந்த ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். முதலில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த நிலையில், பிறகு அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார். அதன் பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு முழுமையாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
ட்விட்டரை வாங்கியதும் அதில் ஏராளமான மாற்றத்தைச் செய்த எலான், தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உட்பட ஏராளமான ஊழியர்களை வேலையிலிருந்து அதிரடியாக நீக்கினார். இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வரவும் திட்டங்களைத் தீட்டி வருகிறார்.
இதனைத் தொடர்து, 320 பில்லியன் டாலராக (ரூ.26 லட்சம் கோடி) இருந்த எலானின் சொத்துமதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலர் (ரூ.15 லட்சம் கோடி) சரிந்துள்ளது. இந்த மிகப்பெரிய சரிவையொட்டி உலக அளவில் பெரும் நஷ்டத்தை சந்தித்த மனிதன் என்ற வகையில் எலான் மஸ்க் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். ட்விட்டரை வாங்கியதற்கான தொகையைச் செலுத்த தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளையும் விற்று வருகிறார் எலான்.
இந்த நிலையில், சிங்கப்பூரில் ட்விட்டர் நிறுவனம் செயல்படும் கட்டடத்திற்கு வாடகை கொடுக்காததால் அதன் உரிமையாளர் ஊழியர்களை வெளியேற்றியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எலான் தனது ஊழியர்களை கட்டடத்திற்கு உள்ளே செல்லாமல் வெளியே நின்று பணியாற்றக் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.