Skip to main content

“அது நக்கீரனின் வீர விளையாட்டு..” - மறைந்த எழுத்தாளர் ‘சிங்கப்பூர்’ ராமன் நினைவலை

Published on 10/02/2022 | Edited on 10/02/2022

 

Singapore Tamil Writer Late A.P.Raman about Nakkheeran Editor

 

சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஏ.பி. ராமன்(90) நேற்று இரவு காலமானார்.

 

1932ல் தமிழகத்தின் கும்பகோணத்தில் பிறந்த ராமன், 1960களில் சிங்கப்பூரில் குடியேறினார். அங்கு உள்ள ஆர்.டி.எஸ். ஒலிபரப்புச் சேவையில் அப்போது அவர் செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். மேலும், இவர் நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். சிங்கப்பூரில் இயங்கிவரும் தமிழ் பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரைகளை எழுதிய ராமன், புதுயுகம் வார இதழ், கலைமலர் மாத இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர். இவர் நேற்று  இரவு பீஷானில் உள்ள அவருடைய இல்லத்தில் இயற்கை எய்தினார். இவரது இறப்புக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர். இவருடன் நெருங்கி பழகிய நக்கீரன் ஆசிரிய தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார். 

 

நக்கீரன் ஆசிரியர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூர் சென்றிருந்தபோது, எழுத்தாளர் ஏ.பி.ராமனைச் சந்தித்திருந்தார். இதுகுறித்து எழுத்தாளர் ராமன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அப்போது பதிவிட்டிருந்தார். அவர் பதிவிலிருந்து;
 


“பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சொந்த வேலை காரணமாக சிங்கப்பூர் வந்திருந்தார். முக்கியமானவர்களை சந்தித்து சில மணி நேரங்கள் அளவளாவியபோது, பல சொந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். நடந்த சில பழைய கதைகளை சுவை குறையாமல் சொன்னார். பப்ளிசிட்டி இல்லாமல் கூட்டிய இந்நிகழ்விற்கு இத்தனை கூட்டமா? 

 

60 வயது தெரியாவண்ணம் இளமைப் பூச்சுடன் படர்ந்து வளர்ந்திருக்கும் அவருடைய மீசைக் கதையில் அத்தனை கறுகறுப்பு!. மாப்பிள்ளையை பார்த்த பெண்களில் மீசையைப் பார்த்து மிரண்டு போனவர்கள்  நூற்றுக் கணக்கிலாம். இறுதியில் இணங்கித் தலை நீட்டிய மனைவியாருக்கு இரு மகள்கள். ஆனாலும் வாழ்க்கை முழுவதும்  சடுகுடு விளையாட்டு சர்வ சாதாரணம் ராஜகோபால் என்கிற கோபாலுக்கு! அப்பா என்னென்னவெல்லாமோ படிக்க வைத்தும், இந்த அருப்புக்கோட்டையாருக்கு கொடுத்து வைத்தது பத்திரிக்கைத் தொழில்தான். 

 

ஷ்யாமின் ‘தராசு’ இதழைப் பிடித்துப் பார்த்தார் – முள் சரியாக நிற்கவில்லை. நக்கீரனை சொந்தத்தில் உருவாக்கினார். இன்று அதற்கென ஒரு கொள்கையை நிர்ணயித்துக் கொண்டு, அந்த எல்லையில் நெற்றிக் கண்ணை திறந்து கொண்டிருப்பவர். ஆனாலும் அந்தப் பாதையில் அவர் கண்ட கல்லும், முள்ளும் அவருடைய காலுக்கு மெத்தையாகவில்லை. வாழ்க்கை முழுவதும் இம்சை அனுபவங்கள், சட்டப் பிடியின் சிக்கல்கள், தலையும், மீசையும் தெரியாமல் தப்பி வாழ வேண்டிய அவசியங்கள், அன்றாட அரசியல் தொந்திரவுகள் என தன் அன்றாட நிகழ்வுகளை  அடுக்கிக் கொண்டே போனார் நக்கீரனார்!

 

சந்தன வீரப்பனின் காடேகும் படலம், கம்ப ராமாயணத்தில் ஆரண்ய காண்டம்! 12 ஆண்டு காலம் காட்டில் ஓடியாடி விளையாடிக் கொண்டு, கைக்குக் கிடைத்த சந்தன மரங்களை எல்லாம் வளைத்துப் பிடித்து வியாபாரம் செய்து  கொண்டிருந்த வீரப்பனோடு நட்புறவாடி, உயிரோடு திரும்பியது, என்ன தான் பலன் கிடைத்தாலும், அது  நக்கீரன் கோபாலின் வீர விளையாட்டாகும்! திகில் ஊட்டும் காட்டில், மாநில அதிகாரிகளின் தலைகளை அவ்வப்போது கொய்து போட்டுக் கொண்டிருந்த வீரப்பனோடு கலந்து பழகி, சந்தன மணத்தோடு திரும்பி வந்து வாழ்பவர் கோபால் என்பதை வேண்டாதவர்களும் ஏற்க வேண்டும்.

 

கசப்பையும், இனிப்பையும் நிறைய ருசித்து மகிழ்ந்தவர் இந்த சின்ன வயது பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால். தன்னையும் தற்காத்துக் கொண்டு, தொழிலையும் காப்பாற்றியபடி அரசியல் கலவாத கலந்துரையாடலுடன் சிங்கை வந்து சென்று திரும்பிய நக்கீரன் கோபாலை வாழ்த்துகிறோம். நம் சமூக ஆர்வலர் அருமைச் சந்திரனின் கச்சிதமான ஏற்பாட்டைப் பாராட்டுவோம்” இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்