சிங்கப்பூர் நாட்டில் கடந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சுமார் 10 பில்லியன் சிங்கப்பூர் டாலர் உபரியாக இருந்துள்ளது. இந்தப் பணத்தில் பெரும்பகுதியை 21 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு போனஸாக வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பை அந்நாட்டு நிதி அமைச்சர் ஹெங் ஸ்வீ கீட் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். ‘ஹாங்போவ்’(பணப்பரிசு) எனும் மாண்டரின் வார்த்தையில் இதைத் தெரிவித்த அவர், யார்யாருக்கு எவ்வளவு ஒதுக்கப்படும் என்றும் விவரித்துள்ளார்.
சுமார் 700 மில்லியன் சிங்கப்பூர் டாலர் பணம் இதற்காக செலவிடப்படவுள்ளது. இந்தத் தொகை 27 லட்சம் மக்களுக்கு பிரித்தளிக்கப் படவுள்ளது. 28ஆயிரம் அல்லது அதற்கு குறைவாக ஊதியம் பெறுபவர்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர்களும், 28,001 முதல் 1 லட்சம் சிங்கப்பூர் டாலர்கள் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு 200 சிங்கப்பூர் டாலர்களும், அதற்கும் மேல் ஊதியம் பெறுபவர்களுக்கு 100 சிங்கப்பூர் டாலர்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீதமுள்ள தொகையை ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.