தங்கள் மகனின் கனவு நிறைவேறப் போகும் தருணத்தைக் காண, மிக நீண்ட, கடினமான பயணத்தை மேற்கொண்ட பெற்றோரின் அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஹூவிலர். இவரும் இவரது மனைவி ரீட்டா ரூட்டிமனும் சேர்ந்து தென் கொரிய நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தங்கள் மகனைக் காண 17 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளனர். அதுவும் சைக்கிளில்.

parents

இவர்களது மகன் மிஸ்கா கேஸ்ஸர் ஒரு பனிச்சருக்கு வீரர். 26 வயதாகும் இவருக்கு நான்கு வயதிலிருந்தே ஒலிம்பிக்கில் விளையாடும் லட்சியம் இருந்துள்ளது. தென் கொரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தேர்வான அவருக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை போட்டி இருந்துள்ளது. அதற்கு முன்பாக அங்கு விரைந்த அவரது பெற்றோர், தங்கள் மகனை வாழ்த்தி அனுப்பிய தருணம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

சென்றவருடம் பிப்ரவரி மாதமே சுவிட்சர்லாந்தில் இருந்து கிளம்பிய இவர்கள்,கிட்டத்தட்ட 17,000 கிலோமீட்டர்கள் சைக்கிளிலேயே பயணித்துள்ளனர். 20 நாடுகளின் வழியாக இவர்களது பயணம் நீண்டிருக்கிறது.

தங்கள் பயணம் குறித்து விளக்கும் ஹூவிலர், ‘சைக்கிளில் தினமும் பயணிப்பது கடினமானது. நாளடைவில் தாடி அதிகமானதால் சீன எல்லையில் என்னை அனுமதிக்கவில்லை. பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து அங்கிருந்து கடந்தோம். திறந்தவெளிகளில் கூடாரம் அமைத்து தங்கினோம். பாமிர் நெடுஞ்சாலையில் எங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணித்தோம். இன்று மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பயணம் ஓயப்போவதில்லை. உலகைச் சுற்ற முடிவு செய்துவிட்டோம்’ என தெரிவித்துள்ளார்.