வளைகுடா நாடுகள் அனைத்தும் தங்கள் கவனத்தை எண்ணெய் உற்பத்தியிலிருந்து சுற்றுலாத்துறை நோக்கியும் சமீபகாலமாக திருப்பி வருகின்றன.
ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுலா துறையில் அடைந்துள்ள வளர்ச்சியை கருத்தில் கொண்டு தற்போது சவுதி அரசும் சுற்றுலா துறையை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக முதல்முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க இருப்பதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
UNESCOவால் அங்கீகரிக்கப்பட்ட 5 புராதன சின்னங்கள், துடிப்பான உள்ளூர் கலாச்சாரம் மற்றும் இயற்கை எழில் போன்றவற்றை கண்டு சுற்றுலா பயணிகள் இனி வியக்கலாம் என சவுதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், 49 நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த சுற்றுலா விசாவை ஆன்லைன் மூலமாக பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வெளிநாட்டு பெண்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த கடுமையான ஆடை கட்டுப்பாடுகள் இனி தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.