Skip to main content

மெக்கா, மெதினாவிற்கு பயணம் மேற்கொள்ள வெளிநாட்டவர்களுக்கு சவுதி அரசு அனுமதி!

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

mecca

 

இஸ்லாமியர்கள், தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது மெக்காவுக்குப் புனித பயணம் மேற்கொள்வார்கள். இந்தப் பயணம் ‘ஹஜ் பயணம்’ என அழைக்கப்படுகிறது. இது ஆண்டின் குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே நடைபெறும். இதனைத் தவிர இஸ்லாமியர்கள், மெக்காவுக்கும் மெதினாவுக்கும் உம்ரா என்ற புனிதப் பயணத்தை மேற்கொள்வார்கள். இந்தப் பயணத்தை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

 

ஆனால் கரோனா காரணமாக இஸ்லாமியர்கள், இந்தப் புனித பயணங்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. 18 மாதங்களுக்கு முன்பு, சவுதி அரேபிய அரசு, தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டுப் பயணிகள் வருவதைத் தடை விதித்தது. இதனால் வெளிநாட்டவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணங்களை மேற்கொள்ள இயலவில்லை.

 

இந்தநிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் உம்ரா புனித பயணத்தை மேற்கொள்ளும் பொருட்டு, மெக்கா மற்றும் மதினா ஆகிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்பும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள வெளிநாட்டினரை, சவுதி அரேபிய அரசு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தங்கள் நாட்டிற்குள் அனுமதித்துவருகிறது.

 

ஆஸ்ட்ராசெனகா, மாடர்னா, ஜான்சன் & ஜான்சன், ஃபைசர் ஆகிய தடுப்பூசிகளை சவுதி அரேபிய அரசு அங்கீகரித்துள்ளது. உம்ரா புனிதப் பயணத்திற்கு வெளிநாட்டவரை அனுமதிக்கும் முடிவினையடுத்து, அடுத்த ஆண்டு ஜூலை 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரை நடைபெறவுள்ள  ஹஜ் பயணத்திற்கும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தடுப்பூசி செலுத்திக்கொண்ட, சவுதியில் வசிக்கும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே கடந்த மாதம் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கையில் காசில்லை, பசி, பட்டினி; கதறும் மகன்; கண்ணீர் வடிக்கும் தாய்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023
ad

 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னத்தாய். இவரது மகன் மணிபாலன். மின்னணு சாதனங்கள் நிபுணர் என்று வெளிநாட்டில் வேலை இருப்பதாகக் கூறி சேப்டி யூனியன் காண்ட்ராக்ட்டிங் கம்பெனி என்ற நிறுவனத்தின் மூலமாக சவுதி அரேபியாவிற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் என்ன வேலை செய்தார் என்று தெரியவில்லை. அவரது விசா காலம் 15.10.2023 அன்றுடன் முடிந்துவிட்டது. ஆனால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் அவரது விசாவை நீட்டிப்புச் செய்ய எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

 

இதனால் அவர் அங்கு வேறு இடத்தில் பணிக்கோ உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற வெளியில் கூட செல்ல முடியவில்லை. அவர் ஓரிடத்தில் முடங்கிக் கிடப்பதோடு அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டும், கையில் பணமில்லாமல் மன உளைச்சல் ஏற்பட்டு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததுபோல் தனித் தீவு ஒன்றில் புலம்பிக் கொண்டிருப்பதாகவும், அன்றாடம் நெருக்கடிகள், பசி, பட்டினியால் அழுது புலம்புவதாகத் தனது தாயிடம் செல்போனில் கதறி அழுதுள்ளார்.

 

மேலும், தன்னை எப்படியாவது தாய் நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யக் கேட்டு கண்ணீரும் கதறலுமாய் திரிவதை வீடியோவாகத் தனது தாய்க்கு அனுப்பியிருக்கிறார். இதனால் உறைந்து போனது மணிபாலனின் குடும்பம். தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்து மகனை எப்படியாவது இந்தியாவிற்கு மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீரும் கம்பலையுமாய் கதறியிருக்கிறார் தாய் அன்னத்தாய். தவிர வீடியோ ஒன்றில் வேதனையாக, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். நிலை குலைந்துபோயிருக்கிறது மணிபாலனின் குடும்பம்.

 

 

Next Story

உருக்குலைக்கப்பட்ட ஜபாலியா; இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Saudi Arabia and Jordan have condemned Israel for  beaten on Jabaliya

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில் காசா மீது தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் அதனைத் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன தொலைத் தொடர்பு நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களும், தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், காசாவில்  இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இணையச் சேவை இல்லாததால் தற்போது என்ன நடக்கிறது என்பது தெரியாமல் உலகத்திலிருந்து காசா தனிமைப்படுத்தப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுவரை 8,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், அதில் 60 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காசாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இனி வரும் காலங்களில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் எனக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் நேற்று பாலஸ்தீனத்தில் உள்ள ஜபாலியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஜபாலியாவில் உள்ள அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜபாலியாவிற்கு தஞ்சமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது மனிதாபிமானமற்றது, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்று எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய உதவ வலியுறுத்தியுள்ளன.