இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய புனித தலமான ஹஜ்ஜுக்கு செல்ல கூடுதலாக 30,000 பேரை அனுமதிக்க சவுதி இளவரசர் உறுதியளித்துள்ளார்.
ஜப்பான், ஒசாகா நகரில் நடந்துவரும் ஜி20 மாநாட்டில் சவுதிஅரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி. அப்போது இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள கூடுதலான நபர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கையை ஏற்ற சவுதி இளவரசர் கூடுதலாக 30,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை ஆண்டுக்கு 1.70 லட்சம் பேர் இந்தியாவிலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த அறிவிப்பினால் இனி ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இந்த யாத்திரையை மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில் இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் விஜய் கோகலை பேசுகையில், "இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 1.70 லட்சம் பேர் புனித ஹஜ் பயணம் சென்று வருகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, சவுதிஅரேபிய இளவரசர் முகமது பின் சல்மானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இளவரசர் சல்மான், கூடுதலாக 30 ஆயிரம் இந்திய முஸ்லிம்களுக்கு ஹஜ் புனிதபயணம் வர அனுமதி அளிப்பதாக உறுதியளித்துள்ளார். இதன் மூலம் இனிமேல் 2 லட்சம் பேர் ஹஜ் புனிதப்பயணம் செல்ல முடியும். இது மிகவும் முக்கியமான முடிவு. இதன்மூலம் 2 லட்சம் முஸ்லிம்களுக்கு ஹஜ் புனிதப்பயணம் செய்ய வாய்ப்புகிடைத்துள்ளது" என தெரிவித்தார்.