ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “உலகத்தில் எரிபொருள் தேவை பெரும் சவாலாக இருந்தது. இது போன்ற நேரத்தில் உங்கள் ஒத்துழைப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்பான சிரமங்களில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற முடிந்தது. இது மட்டுமின்றி இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஏற்பட்ட எரிபொருள் தொடர்பான ஒப்பந்தம் ஒரு வகையில் உலக நாடுகளுக்குச் சந்தையில் உறுதித்தன்மையை மறைமுகமாக அளித்ததை உலகமே ஏற்க வேண்டும்.
இது ஒரு சந்திப்பாக இருக்கலாம். மொத்த உலகத்தின் கவனமும் என்னுடைய இந்த பயணத்தின் மீது உள்ளது. இந்த வருகையின் மூலம் உலக நாடுகள் வெவ்வேறு அர்த்தங்களைக் கருதுகின்றனர். நேற்று நீங்கள் என்னை உங்கள் இல்லத்திற்கு அழைத்தீர்கள். ஒரு உண்மையான நண்பரைப் போல நாம் ஒன்றாக 4 - 5 மணி நேரம் செலவிட்டோம். பல தலைப்புகளில் விவாதித்தோம். உக்ரைன் பிரச்சினையை நாங்கள் வெளிப்படையாக விவாதித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் ஒருவருக்கொருவர் கருத்துக்களைக் கேட்டு மரியாதையுடன் புரிந்துகொள்ள முயற்சித்தோம்.
எங்கள் எதிர்கால சந்ததியினரின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அமைதி மிகவும் அவசியம் என்று ஒரு நண்பராக நான் எப்போதும் கூறி வருகிறேன். ஆனால் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் போர்க்களத்தில் தீர்வுகள் சாத்தியமில்லை என்பதையும் நான் அறிவேன். இதனால் தீர்வுகள் மற்றும் சமாதான பேச்சுக்கள் வெற்றியடையாது. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நாம் அமைதிக்கான பாதையைப் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் (The Order of St. Andrew the Apostle) என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். ரஷ்யா - இந்தியா இடையேயான இரு தரப்பு உறவுகளில் பிரதமர் மோடி ஆற்றிய பணிகளுக்காக இந்த விருதை வழங்கினார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வழங்கினார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில், “கிரெம்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ ஹாலில் நடந்த சிறப்பு விழாவில் ரஷ்யக் கூட்டமைப்பின் தலைவரான விளாடிமிர் புடின் இந்தியா - ரஷ்யா இடையேயான உறவை மேம்படுத்துவதில் பங்களித்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய தேசிய விருதை வழங்கினார். இந்த விருது 2019 இல் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த விருதை ஏற்கும் போது அதனை இந்திய மக்களுக்கும், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவுக்காக அர்ப்பணித்தார். இந்த விருது 300 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.