கர்ப்பமடைந்திருந்த 14 வயது பள்ளி மாணவி தன் பெற்றோருக்குப் பயந்து பிறந்த குழந்தையை ஃப்ரீசருக்குள் வைத்துக் கொன்ற சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது.
ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள வெர்க்-துலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவர் கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால், பயம் காரணமாக இதனைத் தன்னுடைய பெற்றோரிடம் மறைத்துவந்த அந்தச் சிறுமி, சாப்பிடுவதால் உடல் எடை கூடுகிறது எனக் கூறிச் சமாளித்து வந்துள்ளார். இந்தச் சூழலில், அண்மையில் ஒருநாள் இரவு அவருக்குப் பிரசவவலி ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் உள்ள வயலுக்குச் சென்ற சிறுமி, குழந்தையைத் தாமாகவே பெற்றெடுத்திருக்கிறார். பின்னர், பெற்றோர் மீதான பயம் காரணமாக, குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தங்களுக்குச் சொந்தமான கேரேஜில் உள்ள ஒரு ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து மூடியிருக்கிறார்.
குழந்தை பெற்றபின்னர் வீட்டிற்குச் சென்ற அவருக்கு உதிரப்போக்கு தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனைக் கவனித்த சிறுமியின் தாய், குடல் அழற்சியாக இருக்கலாம் என நினைத்து உடனடியான அவசர உதவியைத் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது அவரை ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லும்போது, தனக்குக் குழந்தை பிறந்த விவரத்தை அங்கிருந்தவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குழந்தையை மீட்க அதிகாரிகள் விரைந்தனர். ஆனால், அதிக நேரம் ஆனதால் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தச் சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், சிறுமியின் கர்ப்பத்திற்குக் காரணமானவர் 16 வயது சிறுவன் என்றும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.