ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 18 மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், ஏராளமான ஆயுதங்களை செலவழித்த ரஷ்யாவிற்கு ஆயுத உதவி தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, வடகொரியா உடன் ரஷ்ய வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள், ஆயுதங்கள், மற்றும் ராக்கெட்டுகள் இருக்கின்றன. இதனால், வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டும் என ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், வட கொரியா அதிபர் கிம் ஜான் உங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்க பாதுகாப்பு வசதி கொண்ட சிறப்பு ரயில் மூலம் நேற்று ரஷ்யாவுக்கு சென்றார். அதன்படி நேற்று வடகொரிய அதிபர் கிம் ஜான் உங், ரஷ்ய அதிபரை சைபீரியாவில் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பை உலக நாடுகள் மிக உன்னிப்பாக கவனித்தன.
இந்தச் சந்திப்பில் இரு தரப்பிலும், ஆயுத ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பாக பேசியதாக தெரிகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி அதற்கு பதிலாக எரிசக்தி, அதி நவீன ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பெற வடகொரியா அதிபர் கிம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அதேபோல், ரஷ்யா நடத்திவரும் போருக்கு வடகொரியா முழு ஆதரவு தருவதாக கிம் ஜான் உங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் பேசிய வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “ரஷ்யாவிற்கும், வடகொரியாவிற்கும் ஏற்கனவே தங்கள் நாடு பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவை ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொண்டால், புதிய தடைகள் விதிக்கப்படும்” என்றார்.