Skip to main content

ரஷ்யா- வடகொரியா அதிபர்கள் சந்திப்பு; ஆயுத பரிமாற்றத்திற்கு ஒப்பந்தம்?

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

Russia-North Korea Presidents Meet for Arms Transfer Agreement?

 

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 18 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், ஏராளமான ஆயுதங்களை செலவழித்த ரஷ்யாவிற்கு ஆயுத உதவி தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, வட கொரியா உடன் ரஷ்ய வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள், ஆயுதங்கள், மற்றும் ராக்கெட்டுகள் இருக்கின்றன. இதனால், வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டும் என ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறப்பட்டது.

 

இதற்கிடையே, வட கொரியா அதிபர் கிம் ஜான் உங், ரஷ்ய அதிபரை சந்திக்க இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் சில நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தன. மேலும்,  உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களிடையே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக ரஷ்யா நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன. அதே போல், தென் கொரியா ஊடகங்கள், வடகொரியா அதிபர் கிம், ரஷ்யா புறப்பட்டு சென்றுவிட்டதாக வெளியிட்டிருந்தது. ஆனால், இது குறித்து, வட கொரியா ஊடகம் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. 

 

இந்த நிலையில், வட கொரியா அதிபர் கிம் ஜான் உங் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்க பாதுகாப்பு வசதி கொண்ட சிறப்பு ரயில் மூலம் நேற்று ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.  கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு  வடகொரிய அதிபர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் ரஷ்யா தான். அதனால், இந்த சந்திப்புகளிடையே முக்கிய பேச்சு வார்த்தை நடக்கலாம் என்று உலக நாடுகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானால் ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது.

 

இதற்கிடையே, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி அதற்கு பதிலாக எரிசக்தி, அதி நவீன ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றை பெற வடகொரியா அதிபர் கிம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு எதிரான வல்லமை கொண்ட நாடாக காட்டிக்கொள்ளவும் வடகொரியா அதிபர் கிம் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. ஆயுத பரிமாற்றம் நடக்கலாம் என்பதாலும், தற்போது உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதாலும், இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்