ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வரும் நிலையில், அண்மையில் ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்தது. இதனால் ரஷ்யா எந்த நேரமும் உக்ரைன் மீது படையெடுக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என மறுத்தது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கும் அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களையும், போர்க் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பின.
இதனைத் தொடர்ந்து ரஷ்யா-உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் போர் பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில், ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுப்பை தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் நேற்று ரஷ்யா, உக்ரைன் எல்லையில் குவித்திருந்த படைகளை குறைத்தது. தெற்கு மற்றும் மேற்கு ராணுவ மாவட்டங்களின் படைப்பிரிவுகள், தங்கள் பணிகளை முடித்து விட்டு, தங்களது படைத்தளத்திற்கு திரும்பியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதன்பின்னர் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸூடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஷ்ய அதிபர் புதின், ”பேச்சுவார்த்தை பாதையில் செல்ல நாங்கள் தயார். நிச்சயமாக ரஷ்யா போரை விரும்பவில்லை. ஆனால் வாஷிங்டனும் நேட்டோவும் எவ்வாறு பாதுகாப்பு கொள்கையை தங்கள் இஷ்டத்திற்கு விளக்கிக் கொள்கின்றன என்ற விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில் ரஷ்யா, உக்ரைனிடமிருந்து தாங்கள் கைப்பற்றிய பகுதியான கிரிமியாவில் நடைபெற்று வந்த இராணுவ பயிற்சிகள் முடிவடைந்துவிட்டதாகவும், தங்கள் வீரர்கள் தளத்திற்கு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. இது போர் பதற்றத்தை மேலும் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்து, அதை தன்னுடன் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.