கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது தென் கொரியா. சிறிய அளவில் பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி. இந்த நாட்டின் அண்டை நாடான வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை வீசி அச்சுறுத்தி வருகிறது. ஒரு பக்கம் இப்படியொரு பிரச்சனை என்றால், மறுபக்கம் தென்கொரியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, முன்னெப்போதும் இல்லாத அளவு பிறப்பு விகிதம் சரிந்து இருப்பதே ஆகும்.
கடந்த ஆண்டு தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘2022 ஆம் ஆண்டு சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4 சதவீதம் குறைவு ஆகும்’ என்று தெரிவித்திருந்தது.
திருமணங்கள் குறைந்து கொண்டே வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைந்து வருவதாக அந்த நாடு வருத்தம் கொள்கிறது. வேலைப் பளு உள்ளிட்ட பல காரணங்களால் தென் கொரிய இளம் தலைமுறையினர், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாகப் பல்வேறு விழிப்புணர்வுகளையும் தென்கொரியா அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது, ‘குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் விதமாகத் தங்கள் நிறுவன ஊழியர்கள் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு ரூ. 62.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் இது கொடுக்கப்படும். ஆண், பெண் என இருவருக்குமே இந்த சலுகை கிடைக்கும். நமது நிறுவனத்தின் இந்த முயற்சி குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்தி, நாட்டின் எதிர்கால பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக அமையும்’ என்று கூறியுள்ளது.
பல விசித்திரமான சட்டங்களைக் கொண்டு வரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.