மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியா நாட்டில், கடந்த 2021இல் இருந்து ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ தளபதியாக இருந்த மமதி டூம்பூயா தன்னை அதிபராக அறிவித்துக்கொண்டு ஆட்சி செய்து வருகிறார். கினியா நாட்டில் அடுத்த வருடம் மீண்டும் தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இப்படியான சூழலில், அதிபரும் ராணுவ தளபதியுமான மமதி டூம்பூயா பெயரில், கினியாவின் மிக பெரிய நகரங்களில் ஒன்றான நெசரகோரே எனும் பகுதியில் உள்ளூர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.
அதன்படி, கடந்த 1ஆம் தேதி நெசரகோரே பகுதியில் உள்ள மைதானத்தில் உள்ளூர் கால்பந்து அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்துகொண்ட இரு அணிகளும் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில்.. போட்டியின் 82வது நிமிடத்தில் பந்தைப் பிடிக்கச் சென்ற வீரர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அப்போது, மைதானத்தின் மையப்பகுதிக்கு வந்த நடுவர்(Referee) எத்திரணியைச் சேர்ந்த வீரர் ஒருவருக்குச் சிவப்பு அட்டையை காட்டி போட்டியை விட்டு வெளியேற்றியுள்ளார்.
கால்பந்து போட்டியில் நடுவர் பாரபட்சமாக நடந்து கொண்டதாக கூறி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, மைதானத்தில் மோதல் வெடித்தது. இரு அணியைச் சார்ந்த ஏராளமான ரசிகர்கள் திடீரென மைதானத்தில் புகுந்து கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் ஒருவருக்கொருவர் வீசியபடி கடுமையாக தாக்கிக் கொண்டதால், கால்பந்தாட்ட மைதானமே போர்க்களம் போலக் காட்சி அளித்தது.
அந்த சமயத்தில், இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள், தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள குழந்தைகளுடன் மைதானத்தை விட்டு வெளியேற முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, மைதானத்திற்குள் வந்த போலீசார்.. வன்முறையை தடுக்க கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் மோதலை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. மைதானத்திற்கு வெளியில் இருந்தவர்களும் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
மைதானத்திற்கு வெளியே சென்ற பிறகும் ஆவேசம் தணியாமல் இரு தரப்பும் மோதிக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சமூக வலைதள பதிவில் வெளியான வீடியோ தகவலின்படி, மைதானத்திற்கு வெளியே, உள்ளே என பலரது சடலங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சடலங்கள் குவிந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கலவரத்துக்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கினியா நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கால்பந்தாட்ட மைதானத்தில் ஏற்பட்ட கலவரத்தால் அந்நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.