இந்தியாவில் மத சுதந்திரத்தின் நிலை குறித்து செப்டம்பர் 20 ஆம் தேதி அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் விசாரணையை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்திய அரசியல் தளத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் வாஷிங்டனில் இயங்கி வருகிறது. இதன் நோக்கம், உலக நாடுகளில் மத சுதந்திரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதனை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும். இந்த ஆணையம் கடந்த மே மாதம், 2023க்கான அறிக்கையை வெளியிட்டது. அதில், “2022இல் இந்தியாவில் மத சுதந்திரத்திற்கான நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ளது” என்று கூறியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், "இந்த ஆண்டில் இந்திய அரசு அதன் தேசிய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் மத மாற்றத்தை குறி வைத்த சட்டங்கள் உட்பட மத பாரபட்சமான கொள்கைகளை ஊக்குவித்து செயல்படுத்தியுள்ளது. தொடர்ந்து, மதங்களுக்கிடையேயான உறவுகள், ஹிஜாப் அணிவது மற்றும் பசுக்கொலை முதலானவை மற்றும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் மீது (பழங்குடி மக்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது" எனக் கூறியுள்ளது. 4வது முறையாக அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையம் இந்தியாவை விமர்சித்துள்ளது.
ஆனால், இதற்கு இந்திய வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்தது. அதில், "சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் இந்தியா குறித்து ஒருதலைபட்சமான கருத்துகளைத் தொடர்ந்து, இந்த 2023 ஆண்டு அறிக்கையிலும் கூறி வருகிறது. இதுபோன்ற செயல் ஆணையத்தையே இழிவுபடுத்தும். எனவே, இந்த தவறான விளக்கத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். இத்தகைய முயற்சிகளில் இருந்து ஆணையம் வெளிவந்து இந்தியாவின் பன்மைத்துவம், அதன் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அதன் அரசியலமைப்பு வழிமுறைகள் பற்றி சிறந்த புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்." என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலளித்தது.
இந்த நிலையில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் இந்தியாவை விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி ஜோ பைடனும் சமீபத்தில் இரண்டு வெற்றிகரமான இருதரப்பு சந்திப்புகளை நடத்தினர். இது நெருங்கிய உறவை பிரதிபலித்தது. ஆனாலும், மதமாற்ற எதிர்ப்புச் சட்டம், பசுவதை சட்டங்கள் போன்று சிவில் சமூக சட்டம் என இந்தியா மேற்கொண்டுள்ளது. இது குறித்து யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப். இந்தியாவில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே, கீழ் குறிப்பிட்டுள்ள அனைவரும் ஆணையத்தின் முன்பு விளக்கமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பெர்னாண்ட் டி வரேன்ஸ், காங்கிரஸின் சட்ட நூலகத்தின் வெளிநாட்டு சட்ட நிபுணர் தாரிக் அகமது, சாரா யாகர் மனித உரிமைகள் கண்காணிப்பு வாஷிங்டன் இயக்குநர், சுனிதா விஸ்வநாத் இந்துக்கள் மனித உரிமைகளுக்கான செயல் இயக்குநர். மேலும் ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் இந்திய அரசியல் பேராசிரியர்கள் இர்பான் நூருதீன், ஹமத் பின் கலீஃபா அல்தானி மூவரும் விளக்கமளிக்க வேண்டி அழைக்கப்பட்டுள்ளனர். இதனை புதன்கிழமை, செப்டம்பர் 20, வாசிங்டன் ஹார்ட் செனட் அலுவலக கட்டடத்தில் நடத்த உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து விளக்கமளிக்க அமெரிக்க ஆணையம் அழைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.