Skip to main content

ரஷ்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் - தொடரும் பதற்றம்!

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

russia

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வரும் நிலையில், அண்மையில் ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்தது. இதனால் ரஷ்யா எந்த நேரமும் உக்ரைன் மீது படையெடுக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை எனக் கூறி வருகிறது ரஷ்யா. ஆனால் இதனை நம்பாத அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கும் அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களையும், போர்க் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பின. அமெரிக்கா தனது படைகளையும் கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளது.

 

ரஷ்யாவும் உக்ரைனுக்கும் தங்கள் நாட்டிற்கும் அருகில் உள்ள பெலாரஸ் நாட்டில் போர்ப் பயிற்சிகளில் ஈடுபட்டது. இதனால் போர் பதற்றம் அதிகரிக்கவே அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், உக்ரைனிலிருந்து வெளியேறுமாறு தங்கள் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டனர். மேலும் அமெரிக்கா, ரஷ்யா எந்த நேரத்தில் வேண்டுமானாலும் படையெடுப்பைத் தொடங்கலாம் என எச்சரித்தது.

 

இந்தநிலையில் ரஷ்யா, உக்ரைன் எல்லையிலிருந்து படைகளைக் குறைத்துள்ளது. ”தெற்கு மற்றும் மேற்கு ராணுவ மாவட்டங்களின் படைப்பிரிவுகள், தங்கள் பணிகளை முடித்து விட்டு, ஏற்கனவே ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளன. இன்று அவர்கள் தங்கள் ராணுவ லியோனல் செல்ல தொடங்குவார்கள்” ரஷ்யா பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இதனால் போர் பதற்றம் தணியும் எனக் கருதப்பட்ட நிலையில், ரஷ்யா நாடாளுமன்றத்தின் நிறைவேற்றியுள்ள தீர்மானம் மீண்டும் பதற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.

 

ரஷ்ய நாடாளுமன்றத்தின் அதிகாரமிக்க அவையான ஸ்டேட் டுமாவில், ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தநாட்டின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பிராந்தியங்களை இறையாண்மையுடைய நாடாக அங்கீகரிக்குமாறு அதிபர் புதினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி ஒன்றால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகவும், அந்த தீர்மானத்தை ஸ்டேட் டுமாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்ததாகவும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீர்மானத்தின் காரணமாக இரு நாடுகளுக்குமிடையேயான பதற்றம் தொடர்ந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்