இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தின் பலனாக ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். ஒட்டுமொத்த இலங்கையும் கலவரக் காடாக காட்சியளிக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கோத்தபய ராஜபக்சே, ''கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற வன்முறை செயல்களையும், அதற்கு முன்பு நடைபெற்ற வன்முறை செயல்களையும் யாராலும் நியாயப்படுத்த முடியாது. வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது உள்ள ஆட்சி நிர்வாகத்தை மீண்டும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு புதிய அரசாங்கத்தை நிறுவ உள்ளோம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியின் சார்பில் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளது'' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படலாம் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நாளை காலை பதவியேற்க உள்ளது. ரணில் விக்ரமசிங்கே இதற்கு முன்பே ஐந்து முறை இலங்கையின் பிரதமராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் இலங்கை பிரதமர் பதவியை தான் ஏற்க தயார் என சஜித் பிரேமதாசாவும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எழுதியுள்ள கடிதம் மூலம் விருப்பம் தெரிவித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.