தமிழக அரசியல்வாதிகளைப் போல, இலங்கையின் முன்னாள் அதிபரும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்சேவும் மாந்த்ரீகம், ஜாதகம், யாகம் உள்ளிட்டவைகளில் அதீத நம்பிக்கைக் கொண்டவர்.
தமிழக அரசியல்வாதிகளில் மறைந்த ஜெயலலிதாவுக்கு கேரள நம்பூதிரிகளின் பிரசண்ணம், ஜாதக கணிப்பு, அவர்கள் செய்யும் யாகம் உள்ளிட்டவைகளில் தான் அதிக நம்பிக்கை.
அந்த வகையில், மகிந்த ராஜபக்சேவுக்கும் கேரள நம்பூதிரிகளின் பிரசண்ணத்தில்தான் நம்பிக்கை அதிகம். அரசியல் ரீதியாக தனக்கு சிக்கல் ஏற்படும்போதெல்லாம் கேரள நம்பூதிரிகளிடம் யோசனைக் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர் ராஜபக்சே.
இலங்கை அரசியலில் இதற்கு முன்பு அவர் பெற்ற பல வெற்றிகளுக்கு கேரள நம்பூதிரிகள் மந்திரித்துக் கொடுத்த மந்திரகோல்தான் காரணமாக இருந்தது என ஆட்சியில் இருந்தபோது பலமுறை தனது அமைச்சரவை சகாக்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வார் ராஜபக்சே!
அதற்கேற்ப முக்கிய இடங்களில் அவர் மந்திரக்கோலுடன் வருவதைக்கண்டு இலங்கை அரசியல் தலைவர்கள் ஆச்சரியப்பட்டதுண்டு. பலருக்கு அந்த மந்திரக்கோல் பீதியை ஏற்படுத்தியதும் உண்டு.
இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டும் அவரால் அதிகாரத்தில் அமர முடியவில்லை. அவரது பிரதமர் பதவுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள். அதனால், அவரது பிரதமர் பதவி குறித்தக் குழப்பம் இன்னமும் முடிவுக்கு வரமால் இருக்கிறது. பிரதமர் பதவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பும் சாதகமாக வராது என்றே அவரிடம் அவரது சட்ட நிபுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சல்களுக்கு ஆளான ராஜபக்சே, தனது கேரள நம்பூதிரி நண்பர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்புவிற்கு வரவழைத்துள்ளார். கொழும்பு சென்ற நான்கு நம்பூதிரிகள், ராஜபக்சேவுடன் அவரது மாளிகையில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் மாளிகையில் விடிய விடிய பூஜைகளும் யாகமும் நடந்தது. அந்த பூஜையின் முடிவில் பல மாந்ரீகங்கள் அடங்கிய மந்திரக்கோல் தயாரிக்கப்பட்டு அதனை ராஜபக்சேவிடம் தந்துள்ளனர். தற்போது அந்த மந்திரக்கோலுடன் வலம் வருகிறார் ராஜபக்சே! அதைக்கண்டு, " மீண்டும் மந்திரக் கோலா?" என அதிர்ச்சியடைந்துள்ளனர் இலங்கை அரசியல்வாதிகள்!